மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கக்கோரிகலெக்டர் அலுவலகத்தை பட்டியலின மக்கள் முற்றுகை

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பட்டியலின மக்கள், புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை புரட்சி பாரதம் கட்சி மற்றும் மேல்பாதி கிராம பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் பரணிமாரி, துணை பொதுச்செயலாளர் அன்பரசு, இளைஞரணி பொதுச்செயலாளர் தர்மன், மாநில துணை செயலாளர் சகாதேவன், வக்கீல் பிரிவு துணைத்தலைவர் ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், வக்கீல் பிரிவு அமைப்பாளர் பெரமையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேல்பாதி கிராம ஆதிதிராவிட மக்களை இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திரவுபதியம்மன் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரியும், பட்டியல் இன மக்களை சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததை கண்டித்தும், பட்டியல் இன மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீசார் வழிமறித்தனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரதான நுழைவுவாயில் கதவுகளை அடைக்க முயன்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் அதையும் மீறி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட தங்களை உடனடியாக அனுமதிக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.
அமைச்சர் பேச்சுவார்த்தை
இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் பொன்முடி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேல்பாதி கோவிலுக்குள் சென்று வழிபட தங்களுக்கு 45 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கோவிலில் வழிபட உடனே அனுமதி வழங்கக்கோரியும் அமைச்சரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அமைச்சர் பொன்முடி கூறுகையில், மேல்பாதி கோவிலுக்குள் சென்று வழிபட உடனே அனுமதி வழங்கப்படும், அதற்கு நான் பொறுப்பு, இங்கிருக்கிற மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் பொறுப்பு, போலீஸ் பாதுகாப்புடன் சென்று கோவிலில் வழிபட உங்களுக்கு அனுமதி வழங்கப்படும். யார் தடுத்தாலும் அவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளியூரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட புரட்சி பாரதம் கட்சியினர் மற்றும் மேல்பாதி பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.