குறுகலான சாலையில் ஆபத்தான முறையில் இயக்கப்படும் வாகனங்கள்

மகேந்திரப்பள்ளி- காட்டூர் இடையே குறுகலான சாலையில் வாகனங்கள் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மகேந்திரப்பள்ளி- காட்டூர் இடையே குறுகலான சாலையில் வாகனங்கள் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறுகலான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்தில் இருந்து காட்டூருக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலானதாகும். இதன் வழியாக வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது.
சீர்காழியில் இருந்து கொள்ளிடம், மாங்கனம்பட்டு, தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி வழியாக காட்டூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் பஸ் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் அச்சம்
கார், பஸ், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது எதிரே வேறு வாகனங்கள் வந்தால் வழிவிட முடியாத அளவுக்கு சாலை குறுகலாக காட்சி அளிக்கிறது. சாலை குறுகலாக உள்ளதால் மின் கம்பங்கள் மீது வாகனங்கள் மோதி அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
மகேந்திரப்பள்ளி- காட்டூர் இடையேயான குறுகலான சாலையில் அரசு பஸ்சை அதன் டிரைவர் மிகவும் சிரமத்துடன் இயக்கி வருகிறார். சாலையின் வளைவு பகுதியில் பஸ்சை திருப்பும்போது மின்கம்பத்தில் மோத வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
சில நேரங்களில் இந்த சாலை வழியே அதிக அளவு கனரக வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே மகேந்திரப்பள்ளி- காட்டூர் சாலையில் வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்தை அகற்றவும், சாலையை உடனடியாக அகலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.