பெரியசாமிகள் கோவில் திருவிழா

இடையக்கோட்டையில் பெரியசாமிகள் கோவில் திருவிழா நடந்தது.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் வீரமாத்தியம்மன், மாயவன், கண்ணிமார், அங்கம்மாள், அனந்தம்மாள், தவருபிள்ளை, நாகம்மாள், கருப்பணசாமி, மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் ஆகிய பரிவார தெய்வங்களின் பெரியசாமிகள் கோவிலில் வைகாசி மாத திருவிழா நடந்தது. விழாவையொட்டி பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில், நேற்று அதிகாலை கோவிலில் மாவிளக்கு, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில் பங்காளிகள் 50 கிடாய்களை நேர்த்திகடன் செலுத்த கொண்டு வந்தனர். அந்த கிடாய்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு கோவில் பூசாரி புனிதநீரை கிடாய்கள் மீது தெளித்தார். பின்னர் கிடாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக பலியிடப்பட்டன. பிறகு அதன் இறைச்சியை சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை சிலம்பாட்டம், கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் திண்டுக்கல், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.