பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளை கோவை, தஞ்சாவூர், பெரியகுளம், கிள்ளிகுளம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் 'பி' பிரிவு மண்டலத்தில் அடங்கிய தேனி, மதுரை, கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 12 வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிகள் வருகிற 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதனையொட்டி விளையாட்டு கழக கொடி மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. போட்டிகளை வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மண்டல அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.