மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்; கிராம மக்கள் மனு

மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் தலைமை தாங்கினார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர். அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்த மறவப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், மறவப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படும். அப்போது திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டும் நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 10, 11-ந்தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா நடக்கிறது. அதன் பின்னர் 12-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
236 மனுக்கள்
இதேபோல் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 236 பேர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதம் நடந்தது. பின்னர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மண்எண்ணை கேனுடன் பெண்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறைவடையும் நேரத்தில் 2 பெண்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணின் கையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதை கவனித்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணிடம் இருந்த கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை சேர்ந்த சித்ரா (வயது 50) என்பதும், அவருக்கு சொந்தமான நிலத்தை 20 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை எச்சரித்த போலீசார், கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.