பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணை; அதிகாரி அமுதா முன் 10 பேர் ஆஜர்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணைக்காக அதிகாரி அமுதா முன் 10 பேர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து அனைத்து போலீசாரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 2-ம் கட்ட விசாரணைக்காக அதிகாரி அமுதா முன் 10 பேர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து அனைத்து போலீசாரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பற்கள் பிடுங்கிய விவகாரம்
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்று யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்
2-ம் கட்ட விசாரணை
இந்த நிலையில் அதிகாரி அமுதா தனது 2-வது கட்ட விசாரணையை நேற்று காலை 10 மணி அளவில் அம்பை தாலுகா அலுவலகத்தில் தொடங்கினார்.
அப்போது, விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதால், தாலுகா அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே அதிகாரி அமுதா தனது விசாரணை மேற்கொண்டார்.
10 பேர் ஆஜர்
இதையடுத்து பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16, 17 வயதுள்ள 2 சிறுவர்கள் ஆகிய 5 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த வக்கீல் மகாராஜன் தலைமையில் சிவந்திபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, சிவந்திபுரத்தை சேர்ந்த மற்றொரு மாரியப்பன், விக்கிரமசிங்கபுத்தை சேர்ந்த வேதநாராயணன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.