தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர் அருகே தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர் அருகே தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தாய்சோலாவில் தனியார் தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தநிலையில் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 2020-2021-ம் ஆண்டிற்கான போனஸ் வழங்க வேண்டும், விடுப்பு ஊதியம், மருத்துவ பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2 வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கஞ்சி தொட்டி திறந்தனர்
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாதேவன், பழனி, ருத்ரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
இதைதொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 1 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. எனவே, தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிக்கு செல்வதை புறக்கணிக்க போவதாகவும், தொடர்ந்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.