குளத்தில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு; தூர்வார கோரிக்கை

கம்பம் ஒடப்படிகுளத்தில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடியும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் நிலங்களில் ஒருபோக நெல் சாகுபடியும் நடக்கிறது. இதில், கம்பம் பகுதியில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த குளங்களின் பாசனத்தின் மூலம் கம்பம் பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கம்பம் ஒடப்படிகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளம் மண்மேவி கிடக்கிறது. மேலும் அதில் செடி, கொடிகள் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பருவமழை காலங்களில் குளத்தில் முழு அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னனர்.