வேணுகோபாலசாமி கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகள்

கொள்ளிடத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான வேணுகோபாலசாமி கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த கோவிலை புனரமைத்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான வேணுகோபாலசாமி கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இந்த கோவிலை புனரமைத்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வேணுகோபாலசாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் வேணுகோபாலசாமி கோவில் தெரு உள்ளது. இந்த கோவில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பாமா, ருக்மணி உடன் வேணுகோபாலசாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது.
இந்த கோவிலில் உற்சவமூர்த்தியான ராமர், வில்லேந்திய நிலையில் லட்சுமணன், சீதை, அனுமான் உள்ளிட்ட விக்கிரகங்கள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டவை ஆகும். இதில் ராமர் வில்லேந்தி நிற்கும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது
108 திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு இணையாக சாலிகிராமம் என்ற கல் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதேபோல் இந்த கோவிலும் சாலிகிராமம் கல் அமைந்துள்ளது. இதற்கு சிறப்பு பூஜைகள் விசேஷ காலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தில் செயல்பட்டு வரும் வேணுகோபாலசாமி கோவில், தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் குடமுழுக்கு கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த கோவிலில் வழக்கமாக நடைபெறும் பூஜை புனஸ்கரங்கள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு நடத்த வேண்டும்
பல்வேறு சிறப்பு வாய்ந்த வேணுகோபாலசாமி கோவில் குடமுழுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தற்போது பராமரிப்பின்றி கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் செடிகள் முளைத்து வருகிறது. இதனால் கோவில் கோபுரத்தில் உறுதி தன்மை வலுவிழந்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வேணுகோபாலசாமி கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி புனரமைத்து திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பக்தர்கள் அச்சம்
கொள்ளிடம் நாதல்படுகையை சேர்ந்த ரவி சுந்தரம் கூறுைகயில், கொள்ளிடம் வேணுகோபால்சாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் சேதமடைந்து செடி,கொடிகள் வளர்ந்து வருகிறது.
இதனால் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.இந்த கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி விரைவில் குடமுழுக்கு நடந்த வேண்டும் என்றார்.