கிணற்றில் வீசப்பட்ட போலீஸ் ஏட்டு உடல் மீட்பு

ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட போலீஸ் ஏட்டுவின் உடலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட போலீஸ் ஏட்டுவின் உடலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் ஏட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). காவல் துறையில் ஏட்டுவாக பணியாற்றி புகாருக்குள்ளாகி பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய தாயார் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமார் (19), பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ் (37) ஆகிய 2 பேரின் செல்போன்களும், செந்தில்குமாரின் செல்போனும் ஒரே இடத்தில் சுவிட் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் கடந்த 13-ந்தேதி போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும், செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசியதாக கூறி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கிணற்றில் இருந்து உடல் மீட்பு
இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே போலீஸ் ஏட்டு கொலை தொடர்பாக சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் ஊத்தங்கரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் ஏட்டு செந்தில்குமாரை அவர்கள் 2 பேரும் கொலை செய்து உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் இருந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவியான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.