மோட்டார் சைக்கிள் மீது சிமெண்டு லாரி மோதி போலீஸ்காரர் பலி

மோட்டார் சைக்கிள் மீது சிமெண்டு லாரி மோதி போலீஸ்காரர் பலியானார்.
போலீஸ்காரர்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தாதங் கோட்டையை சேர்ந்தவர் பப்புசாமி. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 34). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக கரூர் ஆயுதப்படையில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
லாரி மோதி பலி
கரடிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ்காரர் விஜயகுமார் படுகாயமடைந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.