வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்ட பணிகளை அலுவலர்கள் உரிய காலத்திற்குள் விரைந்து நிறைவேற்ற உத்தரவிட்டார். கமுதி யூனியனில் டி.புனவாசல் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை உடைய குழந்தைகளின் நிலையினை மேம்படுத்தும் பொருட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு உணவு திட்டம் வழங்கவும் உத்தரவிட்டார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
அதன்படி பாலூட்டும் 842 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், ஊட்டச்சத்து குறைபாடுடைய 99 ஆயிரத்து 900 குழந்தைகளுக்கு பெட்டகங்களும் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் வல்லந்தை கிராமத்தில் 16 விவசாயிகள் இணைந்து 15.42 ஏக்கரில் 15 வருடத்திற்கும் மேலாக இருந்த கருவேல மரங்களை அகற்றி விளைநிலமாக மாற்றி உள்ளனர். 343 அடி ஆழ்துளை கிணறு அமைத்து சூரிய சக்தி மோட்டார் அமைத்து 7 ஏக்கரில் நிலக்கடலை, 2 ஏக்கரில் எள், 3 ஏக்கரில் மாங்கன்றுகள் நட்டுள்ளனர்.
நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசு முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வல்லந்தை கிராமத்தில் 200 ஏக்கரில் உள்ள அகால் தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்தார்.
ஏற்றுமதி
அங்கு பலா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மாதுளை, பேரிச்சை, முந்திரி, தென்னை, தர்பூசணி, வெண்டை போன்ற பயிர்களை பயிரிட்டு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருவதை அரசு முதன்மை செயலாளர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் விசுவபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.