அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி

கீழப்பிடாவூர் அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மானாமதுரை,
கீழப்பிடாவூர் அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்வி சீர்
மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று கல்வி சீர் வழங்கும் விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்தும், பாரம்பரிய உணவுகள் குறித்தும் பேசினர்.
இந்த பள்ளியில் தற்போது 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜீவா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் தனித்திறமைகளை உருவாக்கியுள்ளனர். தனியார் பள்ளிகளை போல ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய அளவில் மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.
பாரம்பரிய உணவு திருவிழா
இந்நிலையில் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிந்த கிராம மக்கள் பள்ளிக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பில் கணினி, டேபிள், நாற்காலி உள்ளிட்டவற்றை நேற்று ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர். அப்போது மாணவர்கள் மேளம், நாதஸ்வரம் வாசிப்பது போல ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து பாரம்பரிய உணவு திருவிழா பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் 72 வகையான பாரம்பரிய உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் ஜீவா சாகயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலையரசி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காலைலிங்கம், பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து வந்த தலைமை ஆசிரியர்களான செல்வக்குமார், ரமேஷ், பிரேமா, பூமாதேவி, முருகன், பூமிநாதன், கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.