தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா, அரகாசனள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் 3 தலைமுறையாக அந்த பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சக்கரைவேல் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட தலைவர் மல்லையன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அனுமந்தராயன் கோம்பை பகுதியில் 3 தலைமுறைகளாக வசிக்கும் குடும்பங்களை அங்கிருந்து வனத்துறையினர் வெளியேற்ற கூடாது.

இதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் சாந்தியிடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story