அண்ணாமலை கைதை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


அண்ணாமலை கைதை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதா பெண் நிர்வாகிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. பேச்சாளரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியினர், தி.மு.க., அரசை கண்டித்தும், அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும், பெண் நிர்வாகிகளை இழிவாக பேசிய சைதை சாதிக்கை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் பா.ஜனதா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் ரவி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

சூளகிரியில் பா.ஜனதா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா பெண் நிர்வாகியை அவதூறாக பேசிய தி.மு.க. நிர்வாகியை கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி ஒன்றிய தலைவர் லட்சுமிபதி, ஒன்றிய பொதுச் செயலாளர் சேட்டு, இளைஞர் அணி நிர்வாகி சிவா, நரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அண்ணாமலை கைதை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story