தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயி திடீர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேடியப்பன். இவர், தனது குடும்பத்தினருடன் தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு அவரும், குடும்பத்தினரும் திடீரென தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனக்கு சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியாக பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும், அந்த பத்திரத்தை ரத்து செய்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேடியப்பன் தெரிவித்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் அப்போது தெரிவித்தனர். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.