காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: தமிழக எல்லையில் புளிஞ்சூர் சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட கர்நாடக விவசாயிகள்- சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாளவாடி
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி தண்ணீர்
காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட மறுக்கிறது. இதையடுத்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகாவில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று அந்த மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த புளிஞ்சூரில் தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைச்சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களும், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் இந்த சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
சோதனைச்சாவடி முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை கர்நாடக விவசாயிகள் சாம்ராஜ்நகர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாக்கியராஜ் தலைமையில் புளிஞ்சூர் சோதனைச்சாவடிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோஷம் எழுப்பியடி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். அதன்பிறகு சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கர்நாடக மாநில போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து போகச்சொன்னார்கள்.
40 பேர் கைது
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்து விவசாயிகள் சாலையில் படுத்து கோஷமிட்டபடி மறியலை தொடர்ந்தனர். இதன் காரணமாக இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கர்நாடக போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக விவசாயிகள் மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.