காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
இதன் ஒரு கட்டமாக. நேற்று, பல்கலைக்கழக வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பதிவாளர் சிவகுமாருக்கு 3 மாதம் காலம் பணி நீட்டிப்பு வழங்கியதை திரும்ப பெறவேண்டும், பல்கலைக்கழகத்திற்கு முழு நேர பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும், 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால் புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும், 2 ஆண்டுகள் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பண பலன்களை உடனடியாக நிலுவையின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் குறித்து பதிவாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, நிர்வாகத்தின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து உயிர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.