தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்து தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கூடலூர்
வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்து தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் அத்தியாவசிய மற்றும் அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்து தராததை கண்டித்தும், பொன்வயல்-அஞ்சுகுன்னு, தேவன்-2 கொட்டாய் முதல் பாலம் வயல், ஒற்றவயல் வழியாக செல்லும் சாலைகளை புதுப்பிக்காததை கண்டித்தும் தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து பலர் பேசினர். இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பேரூராட்சி பகுதியில் சாலை மட்டுமின்றி தெருவிளக்கு வசதி இல்லாததால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பழுதடைந்த பகுதியில் உள்ள சாலைகளில் எந்த வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலையால், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர். தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் மக்களுக்கான எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணியும் மேற்கொள்ள வில்லை. அனைத்து சாலைகளையும் உடனே சீரமைக்க வேண்டும். தெருவிளக்கு, குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். செயல்படாத கவுன்சிலர்கள் பதவி விலக வேண்டும். உடனடியாக சாலைகள் சீரமைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.