ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் நூலக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் நூலக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x

குளித்தலையில் ரூ.25 லட்சத்தில் கட்டப்படும் புதிய கிளை நூலக கூடுதல் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

குளித்தலை,

நூலகம்

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகர் பகுதியில் கிளை நூலகம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் உள்ள செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிக்க குளித்தலை நகரப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் அல்லாது பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பலர் தினந்தோறும் இந்த நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதில் பலர் தங்களுக்கு அவசியமான புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து தங்களது வீட்டிற்கு சென்று படிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இந்த நூலகத்தில் சுமார் 58 ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

படிப்பதற்கு சிரமம்

ஆனால் போதுமான இடவசதி இங்கு இல்லாத நிலை இருக்கிறது. இதனால் தினசரி செய்தித்தாள்கள் புத்தகங்கள் படிப்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். நூலகத்திற்கான இடமிருந்தும் அதில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் குளித்தலை பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நூலகத்திற்கு சொந்தமான இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கவேண்டுமென கடந்த 2018-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரெங்கராஜனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு

இதையடுத்து அவர் 2018-19-ம் ஆண்டுக்கான தனது மேம்பாட்டு நிதியில் இருந்து குளித்தலை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதற்கான அறிவிப்பு கடிதத்தை கடந்த 2019 ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு இந்த நூலக கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே கூடுதல் நூலக கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இப் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி விடுவிக்காமல் இருந்த காரணத்தால் பணிகள் முழுமையாக மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து கட்டிட கட்டுமான நிதியை விடுவிக்கக்கோரி கடந்த 2020-ம் ஆண்டு கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சென்னை மாநகர கட்டிடத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

கோரிக்கை

இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் நூலக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்து இதில் சிறு சிறு வேலைகள் மட்டுமே தற்போது மேற்கொள்ள வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே புதிய நூலக கூடுதல் கட்டிட பணிகளை விரைவில் முடித்து, கூடுதல் கட்டிடத்தை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story