தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோட்டீஸ்
திருப்பத்தூர் நகராட்சியில் சேலம் மெயின் ரோட்டில் டி.எம்.சி. காலனி பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதி முழுவதும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், இந்த இடத்தில் மாணவியர் விடுதி, அரசு பூங்கா, பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்டுகிறது.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தபட உள்ளதாக கடந்த மாதம் அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, வீடுகளை காலி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை அப்பகுதி மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வீடுகள் இடிக்கப்பட இருப்பதாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தாசில்தார் சிவப்பிரகாசம், அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு குனிச்சி கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பட்டா அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்க மறுத்து பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதியத்திற்கு மேல் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.