குமரியில் மீண்டும் மழை: பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் பதிவு

குமரியில் மீண்டும் மழை: பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் பதிவு
நாகர்கோவில்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து குமரி மாவட்டத்தில் மழை பெய்து வந்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்தது. இதுபோல் நேற்றும் மார்த்தாண்டம், தக்கலை, அழகியமண்டபம், திருவட்டார், அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுபோல் மாவட்டத்தில் சில இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி-22.4, பேச்சிப்பாறை- 4.8, புத்தன் அணை- 20.8, சுருளக்கோடு- 25, அடையாமடை- 3 என பதிவாகி இருந்தது. மழை காரணமாக அணைகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 157 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 200 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 821 கனஅடி நீர் வந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 588 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 243 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.