கடலூரில் அலட்சியத்தால் தொடரும் அவலம்: மின்கம்பங்களை அகற்றாமல் மழைநீர் வடிகால் அமைப்பு பொதுமக்கள் அதிருப்தி
கடலூரில் மின்கம்பங்களை அகற்றாமல் மழைநீர் வடிகால் கட்டப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
கடலூர் மாநகராட்சியில் கடந்த ஆண்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின்போது பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இரும்பு கேட்டையும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட்டையும் திறக்க முடியாதவாறு கான்கிரீட் கொட்டி வடிகால் அமைக்கப்பட்டது. மேலும் கடலூர் கோண்டூரில் குடிநீர் குழாயை அகற்றாமலே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் இதுபோன்று மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. அந்த வகையில் கடலூரில் மின்கம்பங்களை அகற்றாமல் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ரூ.2.15 கோடியில் வடிகால்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நத்தவெளி ரோடு-சரவணா நகர் இணைப்பு சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால், மழைக்காலங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் வடிகால் கட்டுவதற்காக மாநகராட்சி ரூ.2 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.இதையடுத்து மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கு கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வடிகால் கட்டும் பணி தொடங்கியது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வாய்க்காலின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டு வருகிறது.
மின்கம்பங்களை அகற்றாமல்...
இந்த நிலையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் பகுதியில் அடுத்தடுத்துள்ள 3 மின்கம்பங்களை அகற்றாமலே, அவை வடிகாலின் நடுவில் இருக்கும்படி கட்டப்பட்டு வருகிறது.
இதை பார்த்து அதிருப்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், வடிகால் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும், மின்கம்பங்களை அருகில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழைநீர் வடிகாலின் நடுவில் மின்கம்பங்கள் இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிந்து செல்ல தடையாக இருக்கும். எனவே மின்கம்பங்களை மாற்றி அமைத்துவிட்டு, மழைநீர் வடிகால் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.