உடலில் சூடு வைத்தும், பட்டினி போட்டும் கொடுமை: 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்-தாயின் கள்ளக்காதலன் கைது

குமாரபாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்ததுடன், உடலில் சூடு வைத்தும், பட்டினி போட்டும் கொடுமைப்படுத்திய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
எலச்சிபாளையம்:
10-ம் வகுப்பு மாணவி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மகளான 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவியின் தாய் தறிப்பட்டறையில் வேலை பார்த்த போது, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான பிரகாஷ் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
பிரகாசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். பிரகாசின் நடவடிக்கை பிடிக்காததால், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் தாய்க்கும், பிரகாசுக்கும் நெருக்கம் அதிகரித்து, இருவரும் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் மாணவியை, அவரது தாய் பள்ளிக்கு அனுப்பவில்லை.
பாலியல் பலாத்காரம்
இதனால் தாய் வேலைக்கு சென்ற பிறகு, மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது தாயின் கள்ளக்காதலனான பிரகாஷ், அவரிடம் அத்துமீறி உள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது கடந்த சில மாதங்களாக நீடித்து வந்தது.
மாணவி மறுப்பு தெரிவிக்கும் நேரங்களில் எல்லாம் அவரை அடித்து உதைத்துள்ளார். மேலும், உணவு கொடுக்காமல் பட்டினி போட்டும், உடலில் சூடு வைத்தும் பிரகாஷ் கொடுமைப்படுத்தி உள்ளார். இதை தாயிடம் சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்து வந்தார்.
விசாரணை
இதனிடையே பிரகாசின் துன்புறுத்தலால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தாய் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பிரிவுக்கு புகார் சென்றது. அதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர் சவுடேஸ்வரி மாணவியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
அப்போது தாயின் கள்ளக்காதலனால் தனக்கு நடந்த கொடுமைகளை மாணவி, அதிகாரியிடம் அழுதபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், திருச்செங்கோடு அனைத்துமகளிர் போலீசில் புகார்அளித்தார்.
கள்ளக்காதலன் கைது
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மாணவியின் தாயின் கள்ளக்காதலன் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெற்ற தாயின் தவறான பழக்கத்தால், 10-ம் வகுப்பு மாணவிக்கு உடல் மற்றும் மன ரீதியாக நேர்ந்த கொடூரம் குமாரபாளையம் பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.