மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இணையதளத்தில் பதிவு கட்டாயம்


மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இணையதளத்தில் பதிவு கட்டாயம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:30 AM IST (Updated: 10 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பல்லவராயன்பட்டியில் வருகிற 15-ந்தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வருகிற 15-ந்தேதி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் மூலம் தங்களின் பெயரை நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுக்கான சான்றிதழ், கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்கு வரும் போது, கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவை வைத்திருந்தால் மட்டுமே மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கணினி குலுக்கல்

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன், மாட்டின் உரிமையாளர்கள் தங்களின் பெயர், காளையுடன் கூடிய காளை உரிமையாளர் புகைப்படம், உரிமையாளரின் ஆதார் எண், கால்நடை டாக்டரிடம் பெற்ற காளைக்கான உடல் தகுதிச்சான்று ஆகியவற்றுடன் நாளை இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

நிகழ்ச்சியில் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் அந்த காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் நிகழ்ச்சி நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டவுடன் பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், கணினி குலுக்கல்மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story