நகராட்சி கடைக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி கடைக்கு செல்லும் வழியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் மாடியில் உள்ள கடை எண் 23-ஐ விழுப்புரம் வி.மருதூர்மேடு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளர் பசுபதியின் மனைவி பிரேமா வாடகைக்கு எடுத்த நிலையில் அந்த கடைக்கு செல்லும் வழியை தி.மு.க.வினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதுபோல் அதே மாடியில் உள்ள புத்தக நிலையத்திற்கு செல்லும் வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேற்று முன்தினம் நகராட்சி ஆணையரிடம் அ.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர். அப்போது 24 மணி நேரத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுரைப்படி நேற்று மதியம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கோகுல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், பழைய பஸ் நிலையத்திற்கு சென்று அங்குள்ள கடைக்கு செல்லும் வழிப்பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றி பாதை வசதி ஏற்படுத்திக்கொடுத்தனர்.