38 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

38 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க புறம்போக்கு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்து நடவடிக்ைக எடுக்கப்பட்டது.
அணைக்கட்டு
38 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க புறம்போக்கு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்து நடவடிக்ைக எடுக்கப்பட்டது.
அணைக்கட்டு தாலுகா சின்ன கோவிந்தம்பாடி பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய்த்துறையினருக்கு 38 பேர் மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக இடம் தேர்வு செய்யும்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் வீடு கட்டியிருந்தனர்.
இதனிடையே மனு செய்தவர்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக அதிகாரிகள் இடத்தினை அளவீடு செய்ய சென்றபோது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி அங்கு சென்றார். அவருடன் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் சுதா, ஆகியோரும் சென்றிருந்தனர்.
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வந்த வீடுகளையும் நிலங்களையும் அவர்கள் கையகப்படுத்தினர். இதனை யடுத்து பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்த வீடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
அதன்பின் வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை அளவிடு செய்தனர். இதனால் சுமார் ஒரு ஆண்டு காலமாக இழுப்பறியில் இருந்து வந்த பிரச்சனை நேற்று முடிவுக்கு வந்தது. இந்த பணியின்போது சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.