புதிய பஸ் வழித்தடம் அமைக்க கோரிக்கை

புதிய பஸ் வழித்தடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் திருமலைக்குடி, முசுண்டப்பட்டி, வலசைபட்டி, இரணிபட்டி, கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, தர்மபட்டி, குன்னத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் சென்று வர துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி என மூன்று பஸ்கள் மாறி செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் சரியான நேரத்திற்கு தாலுகா அலுவலகம் செல்ல முடியாமல் கால தாமதம் ஏற்படுகின்றது. மேலும் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிளையே நம்பியுள்ளனர்.
எனவே, சிங்கம்புணரியிலிருந்து கொட்டாம்பட்டி, புழுதிபட்டி, கரிசல்பட்டி, வலசைபட்டி வழியாக முசுண்டப்பட்டிக்கு பஸ்கள் இயக்கவும், மற்றொரு வழியாக சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, புழுதிபட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி வரை பஸ்கள் இயக்குவதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் என பலதரப்பட்டவர்கள் பயனடைவர் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.