இடஒதுக்கீடு, தன்மானத்தில் சமரசம் செய்து கொள்ளாதது திராவிட கொள்கை; தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேச்சு


இடஒதுக்கீடு, தன்மானத்தில் சமரசம் செய்து கொள்ளாதது திராவிட கொள்கை; தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேச்சு
x

‘‘இடஒதுக்கீடு, தன்மானத்தில் சமரசம் செய்து கொள்ளாதது திராவிட கொள்கை’’ என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

''இடஒதுக்கீடு, தன்மானத்தில் சமரசம் செய்து கொள்ளாதது திராவிட கொள்கை'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூறினார்.

திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மகளிர் அணியினருக்கான திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை நேற்று தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெசி பொன்ராணி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள் வரவேற்று பேசினார்.

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. திராவிட இயக்க வரலாறு குறித்து பயிற்சி நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களை முன்னிலைப்படுத்தும் தி.மு.க.

மாநில சுயாட்சி, மாநில உரிமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தி.மு.க. பெண்களை முன்னிலைப்படுத்தும் தாய்வழி சமூகமாக உள்ளது.

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் வகையில், தி.மு.க ஆட்சியில்தான் வீடு தேடி உணவு, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்படுகிறது.

அதுபோன்று இந்து சமய அறநிலையத்துறையும் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, பயிற்சி பெற்ற 26 பேர் கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திராவிட கொள்கை

பிறப்பால் யாரும் எந்த தொழிலுக்கு செல்வதிலும் தடை இருக்க கூடாது என்பதை திராவிட இயக்கம் கூறுகிறது. அனைத்து மக்களும் சமம், அனைவரும் அனைத்து பகுதியிலும் சுதந்திரமாக நடக்க வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அங்கு முதலில் நிற்பது தி.மு.க.தான்.

சமுதாயத்தில் பகுத்தறிவு, தன்மானம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், சமதர்மம், அரசியல் ஜனநாயகம், மாநில சுயாட்சிதான் திராவிட கொள்கை. பெண் விடுதலை என்பது ஆண்களை ஒதுக்கிவிட்டு செல்வது அல்ல. ஆண்களையும் உள்ளடக்கியதுதான். அதற்கான விதையை தந்தது திராவிட இயக்கம். அதனை முன்னெடுத்து செல்கிறது தி.மு.க..

பெண்கள் பலர் உள்ளாட்சி பொறுப்புகளில் இருப்பதற்கு அடித்தளம் போட்டது கலைஞர் கருணாநிதி. இடஒதுக்கீடு, தன்மானத்தில் சமரசம் செய்து கொள்ளாதது திராவிட கொள்கை.

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தன்மானத்தோடு நடைபோட முடியும். அதனால்தான் அரசு பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு அளித்து வருகிறது. ஜனநாயகத்தை முதன்மையாக முன்னெடுப்பது தி.மு.க.. ஜனநாயக மரபை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். நம் கொள்கைகளை பெண்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த பயிற்சி பாசறை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தன்னம்பிக்கையை மேம்படுத்த...

தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது திராவிட இயக்கம். எல்லா மதமும் ஒன்றுதான். தன்னம்பிக்கையை மேம்படுத்த திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், துணை செயலாளர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story