சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நைட்டிங்கேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உலக செவிலியர் தினத்தையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நைட்டிங்கேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உலகம் முழுவதும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தன்னலம் பாராமல் பொது நலம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும், செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல், மாநகராட்சி பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நேற்று உலக செவிலியர் தினத்தையொட்டி கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.