ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும்

ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்று வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஓய்வூதியம்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் நேர்காணலில் பங்கேற்று வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் நேர்காணல் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வழக்கம்போல் நேர்காணல் நடக்க உள்ளது.
நேரடியாக கருவூலத்துக்கு வருவதை தவிர்த்து, ஜீவன் பிரமான் இணைய தளம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்று சமர்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை வங்கி மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடி தபால் துறை பணியாளர் மூலம் ரூ.70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். இ-சேவை மையம் மூலமும் சமர்பிக்கலாம்.
இணையதளம்
ஓய்வூதியர்கள் சங்கத்தில் பயோமெட்ரிக் கருவி மூலம் பங்கேற்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கும்போது, ஆதார் கார்டு எண், பி.பி.ஓ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக விவரத்தை பதிய வேண்டும். மேலும் www.tn.gov.in/karuvoolam/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஓய்வூதியம் பெறும் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பலாம்.
வெளிநாட்டில் வசிப்போர் தூதரக அலுவலர், மாஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்றும் அனுப்பலாம். கருவூலத்துக்கு நேரடியாக வர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் வந்தும் சமர்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.