மது விற்பதை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் சந்து கடையில் மது விற்பதை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவேரிப்பட்டணம்
மது விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் சந்து கடையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மது பதுக்கி வைத்து விற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் காவல் துறை மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடை நடத்துவதை கண்டித்து நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரின் மெத்தனப்போக்கு காரணமாக பல்வேறு இடங்களில் இதுபோன்ற மதுகடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சந்து மது கடைகளை மூட வேண்டும், மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.