அரசு பஸ்சில் ஏற்ற மறுத்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்-திருச்செங்கோட்டில் பரபரப்பு
திருச்செங்கோட்டில் அரசு பஸ்சில் ஏற்ற மறுத்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம்:
அரசு பள்ளி மாணவர்கள்
திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வர சிறப்பு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்ல 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கீழேரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அந்த பஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக 8-ம் நம்பர் அரசு பஸ் வந்தது. அதில் மாணவ-மாணவிகள் ஏற முயன்றனர்.
சாலை மறியல்
அப்போது பஸ் கண்டக்டர் மாணவ-மாணவிகளை ஏற்ற மறுத்து, அவர்களை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுவதாகவும், இலவசமாக பயணிக்கும் உங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது.
இதில் அத்திரமடைந்த மாணவ-மாணவிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு-குமாரபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது மாணவர்கள், சிறப்பு பஸ் காலதாமதமாக வருவதால் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடிவதில்லை. இதனால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். மற்ற அரசு பஸ்களில் ஏறினால் கண்டக்டர்கள் தரக்குறைவாக பேசுவதுடன், செருப்பால் அடிப்பேன் என்று கூறுகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்து மற்றும் கல்வித்துறையிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வாகன ஏற்பாடும் செய்து கொடுத்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
திருச்செங்கோட்டில் அரசு பஸ்சில் ஏற்ற மறுத்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.