நெல்லிக்குப்பத்தில் நிறுத்தப்பட்ட சாலை விரிவாக்க பணி; நெடுஞ்சாலைத்துறை கோட்ட அதிகாரி நேரில் ஆய்வு

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணி நிறுத்தப்பட்டதை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர்-மடப்பட்டு இடையே 37 கிலோ மீட்டர் தூரத்திலான சாலை ரூ.230 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் நகருக்குள் வரும் சாலையில் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரையிலான சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திலான சாலையில், ஆக்கிரமிப்புகள் சரியான முறையில் அகற்றாமல் பணிகளை மேற்கொண்டதாக கூறி,அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலை துறையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனுவும் அளித்தனர். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 23-ந்தேதி "தினத்தந்தி"யில் படத்துடன் செய்தியும் வெளியானது.
நேரில் ஆய்வு
இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்டம் கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் நிலஅளவையர் நெல்லிக்குப்பத்துக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து, வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணியை அவர்கள் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதில், வரைபடம் மூலமாக, கோட்ட பொறியாளர் சுந்தரி அளவீடு பணிகளை அங்கிருந்தவர்களிடம் விளக்கி, அதனடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
விரவில் பணிகள் தொடங்கப்படும்
இதை தொடர்ந்து, கோட்ட பொறியாளர் சுந்தரி கூறுகையில், கடலூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த பணியை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணிகளை தொடங்கி, முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .