அழுகிய நிலையில் ஆண் பிணம்
தஞ்சை அருகே கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை அருகே கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துர்நாற்றம் வீசியது
தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டி பைபாஸ் சாலையின் அருகே முட்புதரில் இருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது. நாய் அல்லது பன்றி போன்றவை இறந்து துர்நாற்றம் வீசலாம் என மக்கள் அப்பகுதியை கடந்து சென்றனர். இந்தநிலையில் நேற்றுமாலை முட்புதரில் இருந்து சில நாய்கள் எதையோ கடித்து இழுத்து கொண்டிருப்பதை பார்த்த சிலர் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது.
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலையா? போலீசார் விசாரணை
அதில் அழுகிய நிலையில் இருந்த பிணத்தில் உள்ளாடைகள் ஆண்கள் அணியக்கூடியதாக இருந்ததால் அதை வைத்து பிணமாக கிடந்தவர் ஆண் என்பதும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்பதும், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அழுகிய நிலையில் உடல் இருந்ததால் சம்பவ இடத்திற்கே டாக்டர்கள் குழுவினர் வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் பிணமாக கிடந்தவரின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொலை செய்து இங்கே கொண்டு வீசிவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.