அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
x

வேலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த நபர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. சில மனுக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியாத்தம் கீழ்ஆலத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் அளித்துள்ள மனுவில், குடும்ப பிரச்சினை தொடர்பாக எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறார். அவர் என்னையும், எனது மனைவியையும் தாக்கினார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து நான் வளர்த்து வரும் 3 பசுமாடுகளை கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரூ.10 லட்சம் மோசடி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் அளித்துள்ள மனுவில், வேலூர் ஓட்டேரியில் வசிக்கும் சோளிங்கரை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி பிரமுகர் என்னிடம் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் கூறவும். அவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன், அதற்கு ரூ.12 லட்சம் தரவேண்டும் என்றார். இந்தநிலையில் வஞ்சூர், வேலூரை சேர்ந்த 2 பெண்களிடம் முதல் கட்டமாக ரூ.4 லட்சம் பெற்று அவரிடம் கொடுத்தேன். பின்னர் அவர் வேலை உறுதியாகிவிட்டதாகவும், மீதம் உள்ள பணத்தை பெற்றுத் தருமாறும் கூறினார்.

அதன்பேரில் 2-ம் தவணையாக ரூ.8 லட்சம் பெற்று கொடுத்தேன். பணி ஆணை வந்த பிறகு மீதம் உள்ள பணத்தை தருவதாக தெரிவித்தேன். ஆனால் அவர் வேலைவாங்கி தராமலும், ரூ.10 லட்சத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். பணம் கொடுத்த பெண்கள் என்னை தொந்தரவு செய்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், இதேபோன்று நிலப்பிரச்சினை, பண மோசடி, குடும்ப பிரச்சினை தொடர்பாக ஏராளமானவர்கள் மனுக்கள் அளித்திருந்தனர்.


Next Story