அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24½ கோடியில் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம்


அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24½ கோடியில் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம்
x
தினத்தந்தி 26 Aug 2022 3:26 AM IST (Updated: 26 Aug 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.24 கோடியே 55 லட்சத்தில் பன்மாடி வெள்ளிக்கொலுசு வளாகம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சேலம்

வெள்ளிக்கொலுசு

சேலம் மாவட்டத்தில் வெள்ளி தொழிலாளர்களின் கைவினையால் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனிமவுசு உண்டு. இதனால் சேலம் வெள்ளிக்கொலுசுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

வெள்ளிக்கொலுசு தொழிலை மேம்படுத்தும் வகையிலும், வெள்ளி தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொலுசு உற்பத்தி செய்யும் வகையிலும் சேலத்தில் பன்மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று வெள்ளி தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, சேலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு பன்மாடி கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்தது.

அடிக்கல்

இந்த நிலையில், திருப்பூரில் நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அரசு விழா நடைபெற்றது. அப்போது, சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுக்கு ரூ.24 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் பன்மாடி வெள்ளிகொலுசு கட்டிடம் கட்டுவதற்கான பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக்கொலுசு கட்டிடம் கட்டும் இடத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன், சேலம் சிட்கோ கிளை மேலாளர் ராஜாராம் ஆகியோர் வரவேற்றனர். இதில் அருள் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் எனது தொகுதிக்கு உட்பட்ட அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக்கொலுசு தயாரிப்பு மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

100 தொழில் நிறுவனங்கள்

நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், தமிழரசன், பிரதீப், தேன்மொழி, வெள்ளி கொலுசு சங்க இணை செயலாளர் முனியப்பன், ஆலோசகர் பாபு உள்பட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியாகவுண்டம்பட்டியில் 100 தொழில் நிறுவனங்கள் செயல்படும் வகையில் 3 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி 18 மாதங்களில் முடிவடைந்து வெள்ளி தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று சிட்கோ கிளை மேலாளர் ராஜாராம் தெரிவித்தார்.


Next Story