128 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட 2 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

128 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி, சத்யா ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முத்துலட்சுமியின் கணவர் மனோகரன், சத்யாவின் மகள் திவ்யா ஆகியோர் தனித்தனியாக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சட்டவிரோத காவல்
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ''இருவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி போலீசார் கைது செய்தனர். ஆனால், 50 நாட்கள் காலதாமதமாக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கடந்த ஜனவரி 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதை விசாரித்த அறிவுரை கழகம், இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போதிய காரணங்கள் இல்லை என்று கூறி கலெக்டர் உத்தரவை நிராகரித்து கடந்த மார்ச் 16-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இவர்களை சிறையில் இருந்து விடுவிக்க கடந்த ஜூலை 22-ந்தேதிதான் அரசு உத்தரவிட்டது. அதாவது 128 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'' என்று வாதிட்டார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இதற்கு உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''அறிவுரை கழகம் மார்ச் 16-ந்தேதி உத்தரவு பிறப்பித்தவுடனே, குண்டர் சட்டத்தை திரும்ப பெற தாக்கல் செய்த கோப்புகளுக்கு உள்துறை சார்பு செயலாளரும், துணை செயலாளரும் அதே நாளில் ஒப்புதல் அளித்துவிட்டனர்.
இந்த கோப்புக்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மறுநாள் அதாவது மார்ச் 17-ந்தேதி ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால், இந்த கோப்பு எனது அலுவலகத்துக்கு ஜூலை 22-ந்தேதிதான் வந்தது. இந்த காலதாமதத்துக்கு காரணமான உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
தனிநபர் சுதந்திரம்
இதையடுத்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகை கலெக்டர் உத்தரவை அறிவுரைக் கழகம் ஏற்க மறுத்து, 128 நாட்களுக்கு பின்னரே மனுதாரர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுவும், இந்த ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்த பின்னரே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
128 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் இருந்ததால் அவர்களது தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே தனிநபர் சுதந்திரத்தைவிட மிகப்பெரிய சுதந்திரம் வேறு எதுவும் இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் தனிநபர் சுதந்திரத்துக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
இழப்பீடு
தனி நபர் சுதந்திரத்துக்கு பாதிப்பு வரும்போது, அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
அதனால், பெண்கள் இருவருக்கும் தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக 6 வாரத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த மனுக்களை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.