கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஏற்படுத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு


கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஏற்படுத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:30 AM IST (Updated: 28 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்-பழங்குடியின பெண்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஏற்படுத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்-பழங்குடியின பெண்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஏற்படுத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் 40 இடங்களில் ஏற்படுத்த தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆதிதிராவிடர் பெண்களை உறுப்பினராக கொண்டு ஆதிதிராவிடர் பெண்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்து கொள்ளலாம்.

மானியம்

இந்த திட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க தகுதியான 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு தேவையான பதிவேடு புத்தகங்கள், பரிசோதனை உபகரணம், பால் கேன்கள் வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட பால்வளத்துறை மாவட்ட துணைப்பதிவாளரால் உரிய முன்மொழிவு பெறப்பட்டு 4 மாத காலத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சங்க உறுப்பினர்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மகளிர் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.

கறவை மாடு

இதில் பயன்பெற ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த பெண்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story