ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

திருவாரூர்

நீடாமங்கலம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

விடுப்பு எடுத்து போராட்டம்

ஊரக வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரிக்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 23 மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

அலுவலகம் வெறிச்சோடியது

அதன்படி நேற்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

36 அலுவலர்களும்,24 ஊராட்சி செயலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வலங்கைமான்

இதேபோல் வலங்கைமானில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த போராட்டத்தால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கின. மத்திய, மாநில அரசு திட்ட பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story