தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
சீர்காழி நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 70-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பிரகாசம் ஆகியோர் தலைமையில் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கையுறை, மண்வெட்டி, அரிவாள், மண் அள்ளும் சட்டி உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை கொட்டுவதற்கு தேவையான இடத்தினை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து தர வேண்டும். தூய்மை பணியாளர்களை தரை குறைவாக நடத்தக்கூடாது.
பேச்சுவார்த்தை
நிரந்தர பணியாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களை தரைக்குறைவாக நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நேற்று சீர்காழி நகர் பகுதியில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.