தூய்மை பணியாளர்கள் 'திடீர்' போராட்டம்


தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
x

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் திடீரென பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

தூய்மை பணியாளர்கள்

நாமக்கல்-மோகனூர் சாலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 160 தூய்மை பணியாளர்களை நியமித்து உள்ளது.

இவர்கள், காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை, இரவு 7 மணி முதல், மறுநாள் காலை 7 மணி வரை என 3 சிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர் விக்னேஷ் என்பவரின் ஆதார் மற்றும் பான் கார்டில், ஒரே முகவரி இல்லாமல் மாறி இருந்து உள்ளது. அதனால் அவற்றை சரி செய்து வந்தால் மட்டுமே வருகை பதிவேட்டில் பதிவு செய்ய முடியும் என மேற்பார்வையாளர் கூறியதாக தெரிகிறது.

மேலும் மேற்பார்வையாளர் சரியான பணி ஒதுக்கீடு செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. விக்னேசுக்கு வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், பணி ஒதுக்கீடு முறையாக செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தினக்கூலி அடிப்படையில் நாள்ஒன்றுக்கு ரூ.720 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பரபரப்பு

கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உத்தரவின்பேரில், ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் எழில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது விக்னேசிற்கு வருகை பதிவை உறுதி செய்வது, சரியான பணி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து 2½ மணி நேரம் நடந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பணிக்கு திரும்பினர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story