கடகத்தூர், பாப்பாரப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-செயற்கை நிறமூட்டிய 500 கிலோ வெல்லம் பறிமுதல்


கடகத்தூர், பாப்பாரப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-செயற்கை நிறமூட்டிய 500 கிலோ வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கடகத்தூர், பாப்பாரப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை நிறமூட்டிய 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை கலப்படமின்றி தயாரிக்கப்படுவதை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்ட அலுவலர்கள் குழுவாக சென்று தர்மபுரி கடகத்தூர், முத்து கவுண்டன் கொட்டாய், பசுமைநகர் மற்றும் பாப்பாரப்பட்டி, வேலம்பட்டி, பனந்தோப்பு, தட்டாரப்பட்டி, பாலக்கோடு, காவாப்பட்டி பகுதிகளில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

500 கிலோ வெல்லம் பறிமுதல்

வெல்லம் வெளிர் நிறமாக இருக்க சர்க்கரை, மைதா, ரசாயன வேதி பொருள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் போன்றவைகள் கலந்து தயாரிக்கப்படுகின்றனவா? என ஆய்வு செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் 3 ஆலைகளில் வெல்லத்தில் சர்க்கரை, செயற்கை நிறமூட்டி கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வெல்லம் மாதிரி, பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என்றும், அதன் ஆய்வு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உற்பத்தியாளர்களிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோட்டீசு

மேலும் ஒரு ஆலையில் சோடியம் ஹைட்ரோசல்பேட் ரசாயனம் 25 கிலோ மற்றும் பிளாஸ்டிக் கன்டெய்னர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆலையில் இருந்த வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு வெல்லம் மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பபட்டது. மேலும் மற்றொரு ஆலையில் செயற்கை நிறமூட்டும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த 2 ஆலை உரிமையாளர்களுக்கும் நோட்டீசு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா கூறுகையில், வெல்லம் உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு உத்தரவின் படி வெல்லம் தயாரிப்பில் கலப்படமின்மையை உறுதி செய்ய அனைத்து கரும்பாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story