செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை -ராஜ்நாத்சிங் பேச்சு


செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை -ராஜ்நாத்சிங் பேச்சு
x

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், மேற்கு தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலையில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ராஜா வரவேற்றார். மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊழல்

வெறும் பேச்சின் மூலமாக ஊழலை ஒழிக்கமுடியாது. அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்து, ஊழலை பிரதமர் ஒழித்து காட்டியிருக்கிறார். தமிழகத்தில் ஊழல் செய்வது பற்றிய விவாதம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு முறை பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமருவதற்கான வாய்ப்பை தாருங்கள். அதன்பிறகு ஊழல் இல்லாத ஆட்சி தமிழகத்தில் எப்படி நடக்கும் என்பதை நாங்கள் காட்டுகிறோம்.

ஜெயிலாகத்தான் இருக்கும்

அப்படி ஒருவர் ஊழல் செய்தால் அவர் இருக்கும் இடம் அரசு கட்டிலாக இருக்காது, ஜெயிலாகத்தான் இருக்கும். பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்கின்றன. பா.ஜ.க. மட்டும்தான் நாட்டை முன்னேற்றுவதற்காக, மக்களை வளமாக மாற்றுவதற்காக அரசியல் செய்கிறது.

தமிழ்நாட்டை இந்தியாவின் பாரம்பரியமிக்க பெருமைக்குரிய மாநிலமாக பா.ஜ.க. கருதுகிறது. தமிழகத்தை பேதமாக பார்க்கமாட்டோம். அதனால்தான் எந்தவித திட்டங்களாக இருந்தாலும் பிரதமர், அதனை தமிழ்நாட்டில் இருந்தே தொடங்குகிறார்.

இப்படி சாதனைகளை செய்யும் பிரதமரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் குற்றம், குறை சொல்லி வருகிறார். பிரதமரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சொல்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது அவரை கைது செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இப்போது அதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்கிறார். இரட்டை வேடம் போடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.

சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்துள்ளீர்கள். எதுக்காக இப்படி செய்தீர்கள்?. தமிழ்நாட்டில் எப்போதும் நேர்மறை அரசியல் செய்ய வேண்டும். இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் எடுக்க கூடாது. ஸ்டாலின் என்ற பெயர் ரஷியா நாட்டை சேர்ந்த சர்வாதிகாரியின் பெயர். அந்த சர்வாதிகாரி போன்று நடவடிக்கை எடுக்காதீர்கள். எல்லா அரசியல் கட்சிகளும் பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு நேர்மறையான அரசியலை செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். எப்போதும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு மிகுந்த மரியாதையும், உரிய அங்கீகாரத்தையும் அளிக்கிறோம். வாஜ்பாய் தலைமையில் நமது கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது நமக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு கொடுத்தவர், ஜெயலலிதா. அவர் மீது தமிழ்நாடு மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தது. நாங்களும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தோம்.

பா.ஜ.க. நேர்மையாக செயல்படும் கட்சி. எதை சொல்கிறோமோ, அதை கண்டிப்பாக செய்து முடிக்கக்கூடிய கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி செங்கோல்

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் சக்திவேல், அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் ஆகியோர் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர்.

கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலைக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், தனது பேச்சின் இறுதியில் கூறிய தாவது:-

நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன். ஒவ்வொருவரையும் பார்த்த உடன் அடையாளம் கண்டுவிடுவேன். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை பார்த்த பிறகு நான் சொல்கிறேன். அண்ணாமலை தமிழக தலைவர் மட்டும் அல்ல தேசத்துக்கே தலைவர் ஆகும் தகுதியுடையவராக இருக்கிறார். அனைவருடைய ஆதரவும் அண்ணாமலைக்கு கிடைக்க வேண்டும். பிரதமரின் கட்டளையை தமிழகத்தில் அண்ணாமலை செயல்படுத்தும் வேகத்தையும், செயல்முறையையும் பார்க்கும்போது அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story