சேவை குறைபாடு: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு ரூ.1.15 லட்சம் வழங்க வேண்டும்-தபால் துறைக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு தபால் துறை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஓய்வுபெற்ற ஆசிரியை
நாமக்கல் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 68). ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் சேந்தமங்கலம் தபால் நிலையத்தில் மாதாந்திர வைப்பீட்டு கணக்கு வைத்திருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மாதம் ரூ.2 ஆயிரம் வீதம், காளியம்மாள் வைப்பீடு செய்த பணம் ரூ.52 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து வந்து உள்ளது.
காளியம்மாளின் மகன் கதிரவன் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தபால் நிலையத்துக்கு சென்று, அவரது கணக்கை முடித்து பணம் பெற்று வருமாறு தம்மை தனது தாயார் நியமித்து உள்ளதாக சேந்தமங்கலம் தபால் நிலையத்தில் அதற்கான படிவங்களை மோசடியாக வழங்கி உள்ளார்.
மோசடி புகார்
இதனை ஏற்று கணக்கு முடித்து ரூ.52 ஆயிரத்துக்கான காசோலையை கதிரவனிடம் தபால் நிலைய அலுவலர் வழங்கி உள்ளார். இந்த காேசாலையை பணமாக்கிட, பரட்டையகவுண்டன்புதூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனது தாயார் பெயரில் சேமிப்பு கணக்கை மோசடியாக தொடங்கி அந்த பணத்தை பெற்றுள்ளார்.
பின்னர் கதிரவன் மோசடியாக காளியம்மாளின் கையெழுத்தை போட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வழக்கு நடந்து வருகிறது.
சரிவர ஆய்வு செய்யாமல் தமது கணக்கை முடித்து பணத்தை காசோலையாக, தமது மகனிடம் வழங்கியது சேவை குறைபாடு என்று கூறி கடந்த 2015-ம் ஆண்டு காளியம்மாள் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
ரூ.1.15 லட்சம் வழங்க வேண்டும்
இதை விசாரித்த நீதிபதி டாக்டர் ராமராஜ் நேற்று நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலையில் தீர்ப்பு கூறினார். இதில், 'பரட்டையகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காளியம்மாள் பெயரில் மோசடியாக தொடங்கப்பட்ட கணக்கில் 25-9-2019 தேதியில் நிலுவையில் உள்ள ரூ.70 ஆயிரத்து 506-ஐ 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அவற்றை பெற காளியம்மாளுக்கு சிரமங்கள் இருந்தால், அந்த தொகையை சேந்தமங்கலம் தபால் நிலைய அலுவலரும், நாமக்கல் தபால் கண்காணிப்பாளரும், 8 வார காலத்துக்குள் வழங்கி, கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இதர சிரமங்களுக்கு தபால் துறையினர் இழப்பீடாக ரூ.45 ஆயிரத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
காளியம்மாளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 506 வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.