எந்திரம் மூலம் எள் அறுவடை பயிற்சி
விருத்தாசலத்தில் எந்திரம் மூலம் எள் அறுவடை பயிற்சி நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எந்திரம் மூலம் எள் பயிர் அறுவடை செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் துரைசாமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இயற்கை முறையில் பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி பேசினார். இணைப் பேராசிரியர் அரிசுதன் எண்ணெய் வித்து பயிர்களில் பின்பற்ற வேண்டிய உழவியல் முறைகள் பற்றியும், துறையூர் கிரீஷி அக்ரோ சர்வீஸ் ரவிச்சந்திரன் எள் அறுவடை எந்திரம் பற்றியும், அதை பயன்படுத்தும் முறை பற்றியும், எந்திரம் மூலம் எவ்வாறு எள் அறுவடை செய்ய வேண்டும் என்பது பற்றி செயல் விளக்கம் அளித்தார். இதில் விவசாயிகள் மற்றும் இணைப்பேராசிரியர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், இளநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இணைப்பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.