மக்கள் கோர்ட்டு மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 23 வராக்கடன்களுக்கு தீர்வு
திருச்செந்தூரில் நடந்த மக்கள் கோர்ட்டு மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 23 வராக்கடன்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்தியா முழுவதும் வருகிற 26-ந் தேதி மக்கள் கோர்ட்டு (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து முன்னோடியாக திருச்செந்தூர் கோர்ட்டு வளாகத்தில் நேற்று மக்கள் கோர்ட்டு நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எம்.ராமச்சந்திரன், உறுப்பினர் குருராமன் ஆகியோர் தலைமையில் விசாரணை நடந்தது.
இதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர், கொம்மடிகோட்டை, சோனகன்விளை, உடன்குடி, சாத்தான்குளம், பண்டாரவிளை, மெஞ்ஞானபுரம் ஆகிய கிளைகளில் உள்ள ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 23 வராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10 லட்சத்து 7 ஆயிரம் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் உடனடியாக வசூலிக்கப்பட்டது.
இந்த மக்கள் கோர்ட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதன்மை மேலாளர் நாகேசுவரன், சட்ட மேலாளர் கிளாட்சன் மார்ஷல் ஆகியோர் பங்கேற்றனர்.