இடமாற்றம் செய்யாமல் மின்கம்பத்துடன் சாக்கடை கால்வாய் அமைப்பு சேலம் அருகே பரபரப்பு
மின்கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் அதை நடுவில் விட்டுவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்ட சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.
கொண்டலாம்பட்டி,
சாக்கடை கால்வாய் அமைப்பு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஊராட்சி கொட்டனத்தான் ஏரி கோடிக்காடு பகுதிக்கு செல்லும் வழியில் அதன் சாலையின் ஓரமாக ஒரு இரும்பு மின்சார கம்பம் இருக்கிறது. அங்கே ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் சாக்கடை கால்வாயின் நடுவில் இரும்பு மின்சார கம்பம் இருப்பதை பொருட்படுத்தாமல் அதனை நடுவே விட்டு விட்டு சாக்கடை கால்வாய் அமைத்து விட்டார்கள். கடந்த காலங்களில் இந்த பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குப்பைகளை சாக்கடை கால்வாயிலேயே கொட்டி விடுவதால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி காணப்படுகிறது.
பொதுமக்கள் புகார்
தற்போது சாக்கடை கால்வாயின் நடுவே இரும்பு மின்சார கம்பம் உள்ளதால் அது துருப்பிடித்து விழுந்திடுமோ என்ற அச்சமும், அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும்போது இதற்கு வழிவகை செய்து இரும்பு மின்கம்பத்தை இடமாற்றம் செய்து விட்டு அமைத்திருந்தால் யாருக்கும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருந்திருக்கும். இந்த சாக்கடை கால்வாயை பார்க்கிற போது இதற்கு விடிவுகாலம் ஏற்படாதா என்ற கேள்வியும் எழுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
மின்சார கம்பம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டது. அதன் ஆழம் 7 அடிக்கு மேல் இருக்கும். சாக்கடை கால்வாய்க்கும் அடியில் பதிந்திருக்கும். இதனால் மின்சார கம்பத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்தனர். மேலும் பணி நடைபெறும் போது, ஊராட்சி நிர்வாகம் மின்சார வாரியத்திற்கு இது பற்றி புகார் தெரிவித்து மின் கம்பத்தை மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் சாக்கடை வேலைகளை தொடங்கி இருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது. அதற்கு மாறாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டதால் இது ஒரு பிரச்சினையாகி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வு
இது பற்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கேட்டபோது சாக்கடை கால்வாயை கட்டும்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனை கட்டுகின்ற ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் யாரும் பொருட்படுத்தாமல் இவ்வாறு செய்துவிட்டார்கள் என்றனர்.
மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு மின்கம்பத்தை எப்படி அகற்றலாம், அல்லது இதற்கு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா? என்று தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்