மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய, விடிய சுவாமிக்கு அபிேஷகம்


மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய, விடிய சுவாமிக்கு அபிேஷகம்
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

மகா சிவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய, விடிய சுவாமிக்கு அபிேஷகம் நடக்கிறது.

மதுரை

மகா சிவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய, விடிய சுவாமிக்கு அபிேஷகம் நடக்கிறது.

மகா சிவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும் அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். எனவே பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று வழிபாடு நடத்தலாம்.

நான்கு கால அபிஷேகம்

சிவராத்திரி விழாவையொட்டி இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதன்பின்னர் சனிபிரதோஷ வழிபாடு 4.45 மணிக்கு மேல் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு மகாசிவராத்திரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.

அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளிறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது.

குலதெய்வ வழிபாடு

மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

அதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நேதாஜி ரோடு முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டிற்காக நகர் மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


Next Story