சிப்காட் வராது என அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும்'்

‘அவினாசி பகுதியில் சிப்காட் வராது என அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும்’் என கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி உறுதி அளித்துள்ளார்.
'அவினாசி பகுதியில் சிப்காட் வராது என அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும்'் என கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயம் பாதிப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளது. இங்கு பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பருவமழை சரிவர இல்லாமல் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் தற்போது 97 சதவீதம் முடிவடைந்து கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதால் நலிவடைந்த விவசாய தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தழைக்கும் என்ற முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
அரசாணை வெளியிட வேண்டும்
அவினாசி ஒன்றியம் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி.சிப்காட் திட்டம் இங்கு வராது என வாக்குறுதி கொடுத்தார்.
சிப்காட் வளாகம் அமைப்பதாக அரசு அறிவிப்பு இப்பகுதி மக்களை வஞ்சிப்பதாக தெரிகிறது. ஆகவே சிப்காட் திட்டத்தை கைவிடப்பட்டதாக அரசு இதழ்களில் அரசாணை வெளியிட்டு விவசாய குடும்பங்களை வாழ வழிவகை செய்ய வேண்டும். 'சிப்காட் வராது என அரசாணை வெளியிடும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்'.
இறக்குமதி செய்யப்பட்டு ரேஷன்கடைகளில் விற்கப்படும் பாமாயிலுக்கு தடை விதித்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.